TTV Dinakaran Explain about MP and MLA meet

அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்னை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு யார் ஆட்சியை பிடிப்பது என்ற நோக்கத்தில் உள்ளனர். முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு அணிகளும் இணையும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு நிபந்தனைகளால், அந்த பேச்சு வார்த்தை நடத்தப்படாமல் முடிந்துவிட்டது.

இதைதொடர்ந்து சிறையில் இருந்து வந்த டிடிவி.தினகரன், இரு அணிகளும் இணையவில்லை. எனவே, இனி நானே அதிமுகவை வழி நடத்துவேன் என கூறினார். இதையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதாக அறிவித்தார்.‘

அதை தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை தமது மனைவி மற்றும் உறவினர்களுடன் டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவின் அறிவுரைப்படி குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளித்ததாக கூறினார்.

இரு அணிகள் ஒன்றாக இணையவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக தாம் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறிய டிடிவி.தினகரன், அதற்காக அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தம்மை சந்தித்து பேசுவது தவறு என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.