TTV Dinakaran demanding to allocate cooker logo in local elections

உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு சாதித்து காட்டினார்.

பின்னர் புதிய கட்சி தொடங்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பின்னர் பேரவை தொடங்கலாமா என திட்டம் தீட்டுவதாக கூறப்பட்டது. 

இதைதொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை டிடிவி தினகரன் தாக்கல் செய்துள்ளார்.

அதில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதனால் நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்படவும் குக்கர் சின்னத்தை எங்களுக்கு வழங்கவும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதைதொடர்ந்து டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது எனவும் எனவே டிடிவி தினகரன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.