தினகரனுடன் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று அ.தி.மு.கவில் எழுந்துள்ள கோரிக்கை அ.ம.மு.க நிர்வாகிகளை மிக கடுமையாக அப்ஷெட்டாக்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தினகரனுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.கவின் 2ம் கட்ட நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் பேச ஆரம்பித்துள்ளனர். வலுவான கூட்டணியும் இல்லாமல், மக்கள் அபிமானம் பெற்ற தலைவரும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டால் பல்வேறு தொகுதிகளில் அ.தி.மு.கவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

எனவே தற்போதைய சூழலில் அ.தி.மு.க தொண்டர்களில் கணிசமானவர்களின் ஆதரவை பெற்றுள்ள தினகரனை ஏற்பதை தவிர வேறு வழியில்லை என்ற சில நிர்வாகிகள் கருதுகின்றனர். விரைவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தினகரனுடன் சமாதானமாக செல்லலாம் என்கிற யோசனையை அவர்கள் முன்வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தினகரன் தரப்பையும் எட்டியுள்ளது.

அதிகாரப்பூர்வமாக யாரும் இதுவரை தினகரனை சமாதானத்திற்கு அழைக்கவில்லை. எடப்பாடி, ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் போன்ற முக்கிய பிரமுகர்களும் இது குறித்து எதுவும் வெளிப்படையாக பேசவில்லை. மேலும் கடைநிலையில் இருக்கும் அமைச்சர்களும் கூட இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றனர். 

இருந்தாலும் கூட சில அ.தி.மு.க பிரமுகர்களின் எண்ணம் சமாதானமாக சென்று விடலாம் என்கிற ரீதியில் இருப்பதை தினகரனும் தெரிந்து வைத்துள்ளார். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட தினகரன் கட்சியின் நிர்வாகிகளும் சமாதானம் தொடர்பாக அ.தி.மு.கவில் எழுந்துள்ள பேச்சை பற்றி பதற்றத்துடன் விசாரித்து வருகின்றனர். ஏனென்றால் மீண்டும் அ.தி.மு.க – தினகரன் இணைந்துவிட்டால் தாங்கள் நிர்வாகிகளாக தொடர முடியுமா? என்பது தான் அவர்களின் பதற்றத்திற்கு காரணம். 

தினகரன் கட்சியில் நிர்வாகியாவதற்கு ஏராளமாக செலவு செய்ததுடன், தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., எம்.பி ஆக வேண்டும் என்கிற ஆசையிலும் பலர் உள்ளனர். அ.தி.மு.கவில் இருந்து ஒதுங்கியிருந்தவர்கள், ஓரம் கட்டப்பட்டவர்களும் ஏராளமாக செலவு செய்து தினகரன் கட்சியில் பதவி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க என்றால் ஏற்கனவே அங்கு நிர்வாகிகளாக உள்ளவர்கள் தானே பதவிகளில் தொடர்வார்கள் என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.  

இதனை அறிந்தே தற்போது அமைச்சர்களாக உள்ள யாரையும் தான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தினகரன் சிவகங்கையில் பேட்டி கொடுத்துள்ளார். மேலும் சமாதானம் குறித்த பேச்சுவார்த்தைக்கு தயாரா என்கிற கேள்விக்கும் கூட, மழுப்பலான பதிலையே தினகரன் கொடுத்துள்ளார்.