ttv dinakaran come to r.k.nagar field

நடிகர் விஷாலைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் வாக்குகளைத்தான் பிரிப்பார் என்றும் . அவரால் எந்த பாதிப்பும் இருக்காது எனச் சொல்லி வரும் டி.டிவி தினகரன் வரும் 8 ஆம் தேதி முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி, பாஜக, தீபா, நடிகர் விஷால் என ஒரு பெருங்கூட்டமே களம் இறங்கியிருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கணக்குப் போட்டுத் தான் இந்தத் தேர்தலில் தங்களது அடியை எடுத்து வைத்திருக்கின்றனர். 

இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு ஒற்றுமையாக இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டதால் இதை நம்பியே மதுசூனன் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். இது ஒரு கணக்கு என்றால் திமுக போட்டிருப்பதோ கூட்டணி கணக்கு. மதிமுக, இரு கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவுடன் வெற்றி உறுதி என நம்புகிறது.

இதில் புதுக்கணக்கு போட்டுள்ளார் டி.டி.வி.தினகரன். வெற்றியோ? தோல்வியோ ? எப்படியாவது மதுசூதனனைவிட ஒரு ஓட்டாவது கூடுதலாக பெற வேண்டும் என்பதே தினகரனின் கணக்கு.

ஆனால் நடிகர் விஷால் திடீரென களத்தில் குதித்திருப்பது மதுசூதனன் மற்றும் தினகரனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. எங்கே நடுநிலையாளர்களின் ஓட்டுளை விஷால் பறித்துக்கொள்வாரோ என்ற பயம்தான் அதற்கு காரணம்…

ஆனாலும் விஷாலின் திடீர் பிரவேசத்தை டி.டி.வி.தினகரன் ரசித்து வருவதாகவே தெரிகிறது. அவன் அவன் எடுக்கும் முடிவு தங்களுக்கு சாதகமாகவே இருக்குது என வடிவேலுவின் காமெடியைப் போலத்தான் டி.டி.வி.நினைக்கிறார்.

ஆர்.கே.நகரைப் பொறுத்தவரை அத்தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் என்பதால் அவர்கள் அனைவரும் மதுசூதனனுக்கே வாக்களிப்பார்கள் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் தற்போது களமிறங்கியிருக்கும் நடிகர் விஷாலும் தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மதுசூதனனுக்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தினகரனுக்கு சாதகமாகவே முடியும் என நினைக்கிறது தினகரன் தரப்பு.

இது குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், மதுசூதனன் தெலுங்கு பேசுறவரு. விஷாலும் தெலுங்கு பேசுற ஆளுதானே... அதனால் எப்படிப் பார்த்தாலும் அதிமுக வாக்குகள் சிதறும். அவரை நினைச்சு நாம கவலைப்படத் தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமாக்காரங்களைப் பார்த்து ஓட்டு போட்ட காலமெல்லாம் விஜயகாந்த்துடன் முடிஞ்சு போச்சு... என்றும் சொல்லி இருக்கிறார் தினகரன்.

எது எப்படியோ ? இங்கு அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரு கணக்குடன் களம் காணுகிறது !! இதில் யார் கணக்கு ஜெயிக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.