மே 23-க்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று அமமுக் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சூலூர் தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது,”நான் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் சுற்றி வருகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு அந்த ஆசை இருந்திருந்தால் எனது சித்தி சிறைக்கு சென்றபோதே முதல்வர் ஆகியிருப்பேன். ஜெயலலிதா இறந்த அன்றேகூட முதல்வர் ஆகியிருக்கலாம்.
தமிழக முதல்வராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி  மக்களிடம் ஓட்டு வாங்கியா முதல்வர் ஆனார்? தற்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அணி மாற முயற்சி செய்தார்கள். இது கூவத்தூரில் இருந்த எல்லா எம்எல்ஏக்களுக்கும் தெரியுமே. சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியது ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து நிர்வாகிகளும்தானே. முதல்வராக இருக்க ஓ.பன்னீர்செல்வம் தகுதியற்றவர், சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னவர்களும் அவர்கள்தான்.

 
ஓ.பன்னீர்செல்வம் சரியில்லை என்பதால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர வைத்தோம். அடுத்த நாளே அவர் துரோகம் செய்தார். எந்தத் துரோகத்துக்கும் மன்னிப்பு இருக்கு. ஆனால் நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பே இல்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியைப் பறித்தார்கள். அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வராமல் இருக்க மோடியைச் சந்தித்தார்கள். ஆனால், அது மோடியாலும் முடியவில்லை. 
இப்போது இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறாது என உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. அதனால், 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடிவெடுத்தார்கள். அதற்கும் கோர்ட்டு தடை போட்டுள்ளது. வரும் 23-ம் தேதிக்கு பிறகு நீங்கள் வீட்டுக்கு செல்வது உறுதி. இனி மோடி நினைத்தால்கூட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்காது. மோடியாலும் இந்த ஆட்சியைக் காப்பாற்றவும் முடியாது.
இவ்வாறு டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.