சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்துவரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தையொட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலுள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்திக்கொண்டு தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு காரணம் கூறியுள்ளது.


அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். மதுக்கடைகளைத் திறக்க அமமும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது - கண்டிக்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்துவரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.