கஜா புயல் கரை கடந்து ஒன்பது நாட்கள் ஆகியுள்ளது. மத்திய அரசின் குழுவும் வந்து பார்வையிட்டுள்ளது. இச்சூழலில், தங்களது எதிர்காலத்தை எண்ணியும்,  புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை நினைத்தும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியும் சிலர் மரணமடைந்துள்ளனர். அவ்வாறு மரணமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.” என்று ஏக அக்கறையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் தினகரன். 

இந்த அறிக்கைக்கு பதில் அளித்தும், தினகரனை விளாசியெடுத்து விமர்சித்தும் பதில்களை தட்டி வருகிறார்கள் அ.தி.மு.க.வின் இணையதள விங்கை சேர்ந்தவர்கள். அவர்கள் சொல்வது இதுதான்... “கஜாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு நிச்சயம் உரிய நிவாரணத்தை தரும். அதில் எவ்வித சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். ஆனால் தினகரனெல்லாம் ‘மன அழுத்தத்தால் நிகழ்ந்த மரணங்கள்’-க்காக வருத்தப்படுவதுதான் காலக்கொடுமை. அவரது வருத்தத்தை, ஆணவத்தால் பருத்துப் பெருத்த முதலை ஒன்று கண்ணீர் வடிப்பதாகத்தான் பார்க்கிறோம்.

 

காரணம், சில வருடங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வில் இவரது குடும்பத்தினர் ஆடாத ஆட்டமா? கழக அவைத்தலைவரில் துவங்கி அடிமட்ட தொண்டன் வரை ஒவ்வொருவரையும் தினம் தினம் மன சஞ்சலத்தில் ஆழ்த்தி, கண்ணீர்விட்டு நடுநடுங்க வைத்த குடும்பம்தானே இது! சசிகலா, தினகரன், நடராஜன், திவாகரன், விவேக் என்று இவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் செய்த அராஜக அரசியலால் மனம் நொந்து, வெந்து கண்ணை மூடியவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 

ம்! என்றால் பதவி பறிப்பு, ஏன்? என்றால் கட்சியிலிருந்தே நீக்கம், காலையில் மந்திரி சபைக்குள் வந்தவர் மாலையில் டிஸ்மிஸ், உயிரைக் கொடுத்து உழைத்தவருக்கு தேர்தலில் சீட் இருக்காது, சீட் கிடைத்தவனுக்கு தேர்தல் முடியும் வரை உயிர் கையிலேயே இருக்காது, நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், சிரித்தால் குற்றம்...இவ்வளவு ஏன்? பகுத்தறிவோடு சிந்தித்தாலும் குற்றமே இவர்களுக்கு. 

தலைவர் காலத்தில் கட்சியில் இணைந்து, அம்மாவால் புடம் போடப்பட்ட எத்தனை தலைவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டியுள்ளது இந்த குடும்பம்? மன நிம்மதியில்லாமல் சஞ்சலத்தில் துடித்துத் துவண்ட அவர்களின் சாபம் சும்மாவா விடும் இவர்களை! ஹிட்லர் ஆட்சியில் கூட காணக்கிடைக்காத சர்வாதிகார செயல்பாடுகளை செயல்படுத்தி, அம்மாவையே கூட பல நேரங்களில் மன சஞ்சலத்துக்கு ஆளான சசிகலாவும், அவரது விஷம வார்ப்புகளும் எந்தப் பிறவியிலும் மற்றவர்களின் மனசை பற்றி பேசக்கூடாது, பேசவே கூடாது.” என்று புரட்டி எடுத்துள்ளனர். தினா, என்னாங்க உங்க பதில்!?