மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்களுக்கு ஆதரவாக இல்லை. கொறடா மனு அளித்தபோதே சபாநாயகருக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

3 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தூண்டுவது போல் திமுக செயல்படுகிறது. அரசு ஒப்பந்தங்களில் முதலமைச்சரும்  திமுகவும் கூட்டாக உள்ளனர்' என்றும்  குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விடுவார் என்றும்,  சசிகலா வழக்கு நிலுவையில் உள்ளதால் 3 எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதில் தவறில்லை என்றும் கூறினார்.

மோடி வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தினகரன், அதிமுக கொடியுடன் காவி வண்ணத்தையும், தாமரையையும் சேர்த்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என கலாய்த்தார்.

22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று  இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் டி.டி.வி. தினகரன்  தெரிவித்தார்.