தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், இடைத்தேர்தலுக்காக திசை திருப்பும் வகையிலும் டிடிவி தினகரன் பேசி வருவதாக அதிமுக துணை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் எம்.எல்.ஏ. வைகைச்செல்வன் கூறியுள்ளனர். தினகரன் மீது அவதூறு வழக்கு தொடருவது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முடிவெடுப்பார் என்றும் அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். திகார் சிறையில் வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தார். கடந்த ஆண்டு ஓபிஎஸ் என்னை சந்தித்தது எனது நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். இந்த சந்திப்பின்போது தர்மயுத்தம் என்று கூறி நான் நடந்து கொண்டவிதம் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டார் கூறினார். 

ஆனால், அரசியல் காரணங்களுக்காக நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். எனக்கு முக்கியமான பதவியை கொடுக்க தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தூது விட்டார். எப்படியாவது, தமிழகத்தின் முதலமைச்சராகிவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் துடிக்கிறார் என்று தினகரன் கூறியிருந்தார். இது குறித்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் டிடிவி தினகரன் இதுபோன்று பேசி வருவதாக கூறியுள்ளார். 

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கே.பி.முனுசாமி, ஒரு குடும்பத்துக்குள் கட்சியும் ஆட்சியும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்படி தர்மயுத்தம் நடத்தப்பட்டபோதுதான், சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது. கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அதிமுகவில் இணைந்தோம். அப்படி இருக்கையில், தினகரனோடு தனியாக பேசுவதற்கோ, ரகசியமாக பேசுவதற்கோ எந்தவித முகாந்திரமும் இல்லை. 

தினகரன் இதுபோன்ற கருத்து சொல்வதற்கு தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் கூறி வருகிறார். இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் அதிமுக வெற்றிபெறும் என்ற காரணத்தால், அதனை தடுக்கும் முயற்சியாக இதுபோன்று கருத்துக்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார். எங்களுக்கு தீய சக்தியாக இருப்பவர்கள் தினகரனும் சசிகலாவும்தான். அப்படி இருக்கையில் இவர்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம்.

 

கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அனைவருக்குமே உண்டு. இவ்வாறு கே.பி.முனுசாமி பேசினார். இடைத்தேர்தலுக்காக தொண்டர்களை திசை திருப்பும் முயற்சியில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவதாக வைகை செல்வன் கூறியுள்ளார். தினகரனுக்க எதிராக அவதூறு வழக்கு தொடர்வது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முடிவெடுப்பார் என்றும் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.