முன்னாள் நண்பர்களுக்கு விரைவில் மூக்கனாங்கயிறு கட்டுவோம் என அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேச உள்ளார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பெரிய மாநாடாகவும், இன்று மாலை வெற்றி பொதுக்கூட்டமாகவும் மதுரை பூமியில் நடக்கிறது.

இரு அணிகள் இணையாமல் இருக்க நான் சதி செய்வதாக கூறுகிறார்கள். அது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு. அவர்கள் இணைவதற்காக நானே அவகாசம் கொடுத்தேன். அவர்கள் அதை பயன்படுத்தவில்லை.

என்னுடைய துணை பொதுசெயலாளர் பதவி செல்லாது என கூறுகிறார்கள். இப்போது கூறும் அதே முதலமைச்சர், அமைச்சர்கள் தான் தேர்தல் ஆணைத்திடம் கொடுத்த பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போட்டார்கள். துணை பொது செயலாளர் டிடிவி.தினரகன் என குறிப்பிட்டு அபிடாவிட் செய்தது அவர்கள்தான். இப்போது, அனைவரையும் குழப்புகிறார்கள்.

இன்று மாலை நடக்கும் கூட்டத்துக்கு அனைத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அதில் யார் வருவார்கள். யார், யார் கலந்து கொள்வார்கள் என்பதை மாலையில் பார்ப்போம்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், தங்களது சுயநலத்துக்காக பொதுமக்களையும், அதிமுக தொண்டர்களையும் ஏமாற்றுகிறார்கள். மோசடியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் செய்யும் இதுபோன்ற சித்து வேலைகளைதான் நான் 420 என்று குறிப்பிட்டேன். அப்படி சொன்னதால், எனக்கு பந்த பயமும் இல்லை.

பிப்ரவரி 14ம் தேதி பொது செயலாளர் சசிகலா, சுட்டுக்காட்டியதால் இன்று முதல்வர் என்ற அந்தஸ்தில் பழனிச்சாமி இருக்கிறார். அவரை தேர்ந்தெடுத்தது நாங்கள் தான். அதனால், அவரை பற்றி பயமோ, அச்சமோ எங்களுக்கு இல்லை.

அதிமுக என்ற இயக்கத்தில் திருப்பூரில் விசைத்தறி பழனிச்சாமி என்று ஒருவர் இருந்தார். அதேபோல் பல பழனிச்சாமிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான், இந்த பழனிச்சாமி. ஒரு விபத்தின் காரணமாகவே அவர் முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்.

அவரை, தொண்டர்கள் தேர்வு செய்யவில்லை. சசிகலாதான் தேர்வு செய்து, முதலமைச்சராக அந்த பதவியில் உட்கார வைத்தார்.

பொது செயலாளரால் தேர்வு செய்து, ஆட்சியை பிடித்தவர், பதவியில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து, அதே சசிகலாவின் படத்தை, பேனரை,கட்அவுட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றினார்கள். அதை நான் நன்றாக அறிவேன். இது அனைத்து பதவியின் ஆட்டம்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வமாக சின்னமான இரட்டை இலையை நாங்கள் நிச்சயம் மீட்போம். வரும் நாடாளுமன்ற தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை வைத்து, அதிமுகவினரை போட்டியிட செய்து வெற்றி பெறுவோம்.

எங்களுக்கு மக்கள் பிரச்சனைகள் தெரியும். ஆனால், சிலர்  எங்களை பேசவிடாமல் தடுக்கிறார்கள். இதற்கான அறுவை சிகிச்சையை தேவைப்படும்போது செய்வோம்.


கருத்து சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது. அதுபோல் நடிகர் கமல் கூறிய கருத்துக்கு, தற்போதுள்ள அமைச்சர்கள் கண்ணியமான பதில் கூறவில்லை. ஒருமையில் பேசினார்கள். சிலரது செயல்பாடுகள் சரியில்லாமல் இருக்கிறது. அதை விரைவில் சரி செய்வோம்.


எங்களது ஒவ்வொரு பணிகளுக்கும், முன்னாள் நண்பர்கள் இடர்பாடுகள் செய்கிறார்கள். அதை விரைவில் சரி செய்வோம். விரைவில் அவர்களுக்கு மூக்கனாங்கயிறு கட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.