இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் கடும் போட்டி நிலவும் 5 தொகுதிகளில் டி.டி.வி.தினகரன் அணிக்கு 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

22 தொகுதி சட்டமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் திமுகவும், 3 தொகுதிகளில் அதிமுகவும் மீதமுள்ள 5 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகவும் கூறி இருந்தது. அந்த இழுபறி நீடிக்கும் தொகுதிகளில் 4 தொகுதிகளில் அமமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்தக் கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் அதிமுக ஆட்சியை தக்க வைக்க 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது கட்டாயம். அதில் ஒரு தொகுதி குறைந்தால் கூட அதிமுக ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. அதன்படி திமுக ஆட்சியை பிடிக்க 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் அமமுக 4 தொகுதிகளை வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

தற்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றால் டி.டி.வி.தினகரன் மனது வைக்க வேண்டும். திமுக- அதிமுக யார் ஆட்சி அமைக்க முன் வந்தாலும் டி.டி.வி.தினகரன் ஆதரவு கொடுத்தால் மட்டுமே ஆட்சியை அமைக்க முடியும். ஆனால், திமுகவுடன் இணைந்து இந்த ஆட்சியை களைப்போம் என ஏற்கெனவே டி.டி.வி.அணி வெளிப்படையாகவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஆட்சியை காப்பாற்ற டி.டி.வி.தினகரனின் ஆதரவு தேவை என்கிற நிலை வந்து விடுமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அண்ட் கோ. என்ன முடிவெடுக்கப்போகிறாரோ டி.டி.வி.தினகரன்.