நான் திமுகவில் இணைவதாக கூறுபவர்கள் தான் தங்கள் பாதுகாப்பு கருதி விரைவில் திமுகவில் இணைவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார். சென்னை வந்த கையோடு அடுத்த அரசு முறை வெளிநாட்டு பயணம் பற்றிய தகவலையும் வெளியிட்டார். இந்நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் விளக்கமளித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.  

இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலினுக்கு வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கையுடன் கூடவே வெள்ளரிக்காயையும் சேர்த்து தருகிறோம் என கேலியாக பதிலளித்தார். மேலும், விரைவில் தினகரனும் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்துவிடுவார் என விமர்சனம் செய்தார். தினகரன் கட்சிக்கு மக்களிடையே மாஸ் குறைந்துவிட்டது. முதல்வர் எடப்பாடிதான் மக்களின் பாஸ் என்று கூறினார். 

இந்நிலையில், அமமுக துணைபொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனதுடன்தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றன. வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசினார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகம்பாவத்தில் பேசுகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் தி.மு.க. எங்களுக்கு எதிரிக்கட்சி . இதில் போய் என்னை இணைவார் என்று சொல்பவர்கள் தான், பாதுகாப்பு கருதி விரைவில் தி.மு.க.வில் இணைவார்கள். முதலமைச்சர் வெளிநாடு பயணம் எட்டாவது உலக அதிசயம் சாதனை என சொன்ன அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒன்பதாவது உலக அதிசயம் என்று விமர்சனம் செய்துள்ளார்.