டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவாக இருந்த கள்ளக்குறிச்சி பிரபு இப்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி பக்கம் தாவி இருக்கிறார். 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் விளக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உயர்ந்து ஆட்சியை காப்பாற்றி உள்ளது. அது போல் தி.மு.க. கூட்டணி கட்சியின் பலம் 110 ஆனது. இவர்களில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியின் பலம் 109.

திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக கருதப்படும் பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி மற்றும் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. அவர்களை இழுக்க திமுக முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள பிரபு, ‘’நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராகத்தான் உள்ளேன். நான் அதிமுக தொண்டன்தான். நான் எப்போதும் அம்மாவின் விசுவாசிதான். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் நான் அதிமுகவின் கொறடா உத்தரவு படிதான் செயல்படுவேன்.

ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக ஆட்சியை விழ்த்த நான் துணைபோக மாட்டேன். எனக்கும் மாவட்ட செயலாளராக இருக்கும் குமரகுருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் நான் ஒதுங்கியே இருக்கிறேன். தற்போது நடந்து முடிந்து உள்ள மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணம் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருதான். அதிமுக தொண்டர்களை அவர் சரியாக வழிநடத்தவில்லை.

 

இதனால்தான் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இனிமேலாவது அதிமுக மாவட்ட செயலாளர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் அதிமுக வெற்றிபெற முடியும். கட்சி தலைமையில் உள்ளவர்கள் இனியாவது தொண்டர்கள் விருப்பப்படி செயல்படவேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவு அளித்து வந்த ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் அமமுக படுதோல்வியடைந்ததால் தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது அவர்கள் இருவரும் சபாநாயகருக்கு ஆதரவாகவே வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுடன் சேர்ந்து இந்த ஆட்சியை கலைப்போம் எனக் கூறிய டி.டி.வி.தினகரன் அணியில் இப்போது அவர் மட்டுமே சபாநாயகருக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார் எனக் கூறப்படுகிறது.