உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, நெல்லையில்  பேசிய அவர், ‘கட்சி பதவிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அமமுக உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயம் போட்டியிடும். நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாவது போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருதுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். யாராவது கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம். முன்னாள் அமமுகவின் நிர்வாகி புகழேந்தி காசுக்கு விலை போகிவிட்டார்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்த இடைத்தேர்தல்களில் அமமுகவினர் போட்டியிடவில்லை. இது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. தற்போது அமமுக களத்தில் இறங்குவதால் அதிமுக வாக்கை பிரிக்க வாய்ப்பிருக்கிறது.