வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது நம்பிக்கையின்மையே காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டை அதிகப்படுத்தினால் நல்லது. இது அரசியலாக இருக்கக் கூடாது. ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகிறது.

ஆட்சி இருப்பதால் அதிமுக மூட்டை போல உள்ளது. அவிழ்த்து விட்டால் அது நெல்லிகாய் மூட்டை என்பது தெரியவரும். வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் முதல்வர் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது நம்பிக்கையின்மையே காட்டுகிறது. அவரது கட்சியினர் மீது அவருக்கே நம்பிக்கை கிடையாது என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது.

அமமுகவை கட்சியாக பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறது. ஒரே சின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம்’’ என அவர் தெரிவித்தார்.