அடுத்த "தரமான சந்திப்பு"...! டிடிவி ஸ்டாலினை நோக்க... ஸ்டாலின் டிடிவியை நோக்க..! நடந்தது என்ன..? 

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கிய போது டிடிவி.தினகரனும்- எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு கோரினார். ஆனால், ஆளுநர் மறுக்கவே, திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை.

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை. தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

அடுத்து பேட்டி கொடுப்பதற்காக அமமுக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான டிடிவி.தினகரன் காத்திருந்தார். அப்போது, பேட்டி கொடுத்துவிட்டு சட்டப்பேரவை உள்ளே செல்வதற்காக மு.க.ஸ்டாலின் கிளம்பிய போது எதிரே வந்த டிடிவி.தினகரன் எதிர்க்கட்சி தலைவருக்கு வணக்கம் தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். 

இருந்த போதிலும் ஆளும் அதிமுகவை பற்றியும் திமுக கட்சியை பற்றியும் பல்வேறு விமர்சனங்களை டிடிவிதினகரன் முன்வைத்து வந்தாலும் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது இன்று முக ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருப்பதால், அரசியலில் அடுத்த திருப்புமுனை ஏற்படப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது என விமர்சனங்கள் இப்போது எழுந்துள்ளது.