அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று டெல்லியில் இருக்கும் குடியரசு தலைவர் மாளிகைக்கு அவர் தனது மனைவி மெலானியாவுடன் வருகை தந்தார். அங்கு அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்பை வரவேற்றனர். பின் அவர்கள் டெல்லி ராஜ்கோட்டில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியுடன் தற்போது முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் அவரது மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா டெல்லியில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றை பார்வையிட வருகை தந்தார். அங்கு அவருக்கு பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மெலனியாவின் வருகையை முன்னிட்டு பள்ளி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளிக்கு வந்த மெலனியாவை மாணவர்கள் பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் கைதட்டியும் வரவேற்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் ராஜநடை போட்ட டிரம்ப்..! பிரம்மாண்ட அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு..!

வகுப்பறையில் அமர்ந்து மாணவ மாணவிகளிடம் மெலனியா கலந்துரையாடினார். அவர் முன்னிலையில் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவ மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர். அவற்றை மெலனியா ஆர்வமுடன் கண்டுகளித்தார். டெல்லி அரசு பள்ளிகளில் அதிநவீன வசதிகளுடன் மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு 'மகிழ்ச்சியான வகுப்பறை' என்கிற  திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு, தியானம் போன்ற சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிந்து கொள்வதற்காகவே மெலனியாவின் சுற்றுப்பயணத்தில் இப்பள்ளியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.