திரிபுராவில் நடைபெற்ற வன்முறைகள் சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்க சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் எம்.பி.யை பாஜகவில் சேருமாரு உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டதாக புகார் எழுந்துள்ளது. 
திரிபுராவில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிகளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதன் பின்னணியில் பாஜக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கூறி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து புகார் அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரிபுரா எம்.பி ஜார்னா தாஸ், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது திரிபுரா வன்முறைகள் குறித்த ஆதாரங்களை அமித் ஷாவிடம் ஜார்னா தாஸ் கொடுத்திருக்கிறார்.


அதைப் பெற்றுக்கொண்ட அமித் ஷா, “கம்யூனிஸ்ட் கட்சியே இனி இல்லை.. இன்னுமா அந்தக் கட்சியில் இருக்கீங்க. உடனே பாஜகவில் சேர்ந்துடுங்க” என தெரிவித்ததாகக் ஜார்னா தாஸ் தெரிவித்துள்ளார். இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த ஜார்னா தாஸ், “நான் திரிபுரா பிரச்னைகளைப் பற்றிதான் உங்களிடம் பேச வந்திருக்கேன். பாஜக தலைவராக இங்கே உங்களைச் சந்திக்க வரவில்லை. உள்துறை அமைச்சராக உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். உங்கள் யோசனைக்கு நான் உடன்பட மாட்டேன். பாஜகவை கடுமையாகத் தொடர்ந்து எதிர்ப்போம். உங்களை எதிர்க்கிற வரிசையில் ஒற்றை ஆளாக தனியாக நான் மட்டுமே இருக்கும் நிலை வந்தாலும் எதிர்ப்பேனே தவிர கட்சி தாவ மாட்டேன்” என்று அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்ததாகத் தெரிவித்தார்.

 
மக்களவையில் அசுர பலத்தோடு பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு இன்னும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அண்மையில் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பி.கள், சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக்தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி.கள் பாஜகவில் இணைந்தனர். மேலும் சில எம்.பி.க்களை இழுக்க பாஜக இழுக்கும் என்று கூறப்படும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் எம்.பி., கட்சி மாற அமித் ஷா கேட்டதாகச் சொல்லப்படும் தகவல் பரபரப்பை கூட்டியுள்ளது.