மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை நிலைபாட்டை எடுத்துள்ளது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. 

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த முத்தலாக் சட்டம் தடை மசோதா கடந்த 25-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். இதனால், அதிமுக முத்தலாக் மசோதாவை வரவேற்பதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஓபிஎஸ் மகன் தன்னிச்சையாக முடிவெடுப்பதால் முதல்வர் எடப்பாடி மற்றும் மூத்த அமைச்சர்கள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதாவை, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அப்போது, அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவரான நவநீதகிருஷ்ணன் பேசுகையில், இந்த சட்டத்தின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த சட்டமானது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எனவே இது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கூறினார்.

 

வேலூர் தொகுதியில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அதிமுக இந்த இரட்டை நிலைபாட்டை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.