கொல்கத்தாவில் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்  எதிர்கட்சிகளை சேர்ந்த ஸ்டாலின், தேவகவுடா, குமாரசாமி, மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 25 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் பா.ஜ.க. அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண் ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும்  பங்கேற்றுள்ளனர்.  

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே பாஜகவை அலற  வைத்தார் மம்தா.  தன் கையை வைத்தே தன் கண்ணை குத்துவது என்கிற வழக்குமொழியை இந்த மாநாட்டில் நடத்திக் காட்டினார் அவர். பாஜக எதிராக நடந்த பொதுக்கூட்டத்தில் முதலாவதாக பாஜக அதிருப்தி தலைவர்களுக்கே  பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி  பிரதமர் மோடியை யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து தனது பேச்சை ஆரம்பித்தார்.  

யஷ்வந்த் சின்ஹா அறைகூவல்:

அவர் பேசுகையில், ‘’இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும் என்று பாஜக அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய பாஜக அரசு நாட்டு மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாகவும்,  அரசுக்கு எதிராக பேசினால் தேசவிரோதி என்று முத்திரை குத்துகிறது ’’ என்று அவர் விமர்சித்தார். 

 

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு:

அடுத்து பேசிய பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். ’’மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும். மக்களின் செல்வாக்கை பிரதமர் மோடி இழந்து விட்டார். பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி ஆகியவை தவறானவை’’ என்று அவர் விமர்சனம் செய்தார்.  பாஜகவை சேர்ந்த அதிருப்தியாளர்களை வைத்தே இந்த மாநாட்டை தொடங்கிய மம்தா பானர்ஜியின் திட்டத்தை எதிர்கட்சி தலைவர்கள் மெச்சி வருகின்றனர்.