தேர்தலில் நின்ற பிறகு ஓட்டு வாங்க வேட்பாளர்கள் பல வகைகளில் பிரசாரம் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால், தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டுவதற்காக வாட்ஸ்அப்பில் ஓட்டு போடச் சொல்லி தேசிய கட்சியினர் செய்த அலப்பறைதான் திருச்சியில் இப்போது ஹாட் டாக். இந்தப் புதுமையான ஐடியாவுக்குச் சொந்தக்காரர்கள் காங்கிரஸ் கட்சி.

திருச்சி தொகுதி மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் போன்றோர் கண் வைத்திருக்கும் நிலையில், மண்ணின் மைந்தரான ஜோசப் லூயிஸும் மார்தட்ட தயாராகிவிட்டார். ஜோசப் லூயிஸின் தந்தை அடைக்கலராஜ் காங்கிரஸ் சார்பில் 1984-ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை 4 முறை திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்தவர். திருச்சி மக்களுக்கு மிகவும் நன்கு அறிமுகமான குடும்பம் இது. ஆனால், 1998-ம் ஆண்டு அடைக்கலராஜ் தோல்வியடைந்த பிறகு இந்தக் குடும்பத்திலிருந்து யாரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

 

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஜோசப் லூயிஸ் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். அதற்கேற்றார் போல திருச்சியில் உலாவரும் ஒரு தகவலால் திருச்சி காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டிகள் ஆடிப்போய் உள்ளன. அதற்குக் காரணம் ஒரு வாட்ஸ்அப் செய்தி. ஜோசப் லூயிஸை திருச்சி தொகுதி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்றால், அவரை ஆதரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் பதிவிடப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் செய்தி எல்லோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் இந்த வாட்ஸ்அப் செய்தி காங்கிரஸ் கட்சி சார்பில் அனுப்பப்பட்டதோ என்று பலரும் சந்தேகம் கொள்ள தொடங்கினார்கள். ஏனென்றால், ஜோசப் லூயிஸ் வேட்பாளர் ஆக வேண்டும் என்றால் அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள் என குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யும்படி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண், அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ‘சக்தி ஆப் நம்பர்’ அது. இதனால், காங்கிரஸ் கோஷ்டிகள் அதிர்ச்சிக்குள்ளாயின. இது பற்றி தலைமை வரை விசாரிக்கத் தொடங்கினார்கள். 

இந்த வாட்ஸ் அப் செய்தி திமுக கூட்டணி கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. குறிப்பாக மதிமுகவினர் நொந்து போய் இருக்கிறார்கள். இதுபற்றி ஜோசப் லூயிஸ் தரப்பில் விசாரித்தால், அவரது ஆதரவாளர்களோ புலம்பித் தள்ளுகிறார்கள்.  “இது யார் பண்ண வேலைன்னே தெரியலையே... இப்படி வாட்ஸ்அப் அனுப்புனவங்க லூயிஸுக்கு நல்லது செய்யுறாங்களா இல்ல கெட்டது செய்யுறாங்களான்னே தெரியலேயே...” என்று மண்டையைச் சொரிகிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்கு இது எல்லாம் கைவந்த கலை என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் திருச்சி திமுக கூட்டணியினர்.