வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் எப்படியாக சீட் வாங்கி போட்டியிட்டு எம்.பி. ஆகி விட வேண்டும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திட்டமிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் முதலில் குறி வைத்தது ராமாநாதபுரம் தொகுதியைத் தான். ஆனால் அங்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்க கட்சி களமறிங்க உள்ளதாக தெரிகிறது. இதனால் திருச்சி தொகுதியை கைப்பற்றி விடலாம் என பிளான் பண்ணியிருந்தார்.

அதற்கான காய்களை அவர் நகர்த்தி வரும் நிலையில் தற்போது அங்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி தொகுதியைக் பொறுத்தவரை திமுக சுலபமாக வெற்றிபெறக்கூடிய தொகுதியாக பார்க்கப்படுகிது. அதனால் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க, தி.மு.க., விரும்பவில்லை. எனவே, அத்தொகுதியை, சபரீசனுக்கு ஒதுக்க வேண்டும் என, ஸ்டாலின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

சபரீசன் போட்டியிட்டால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து, திருச்சி மாவட்ட செயலர், கே.என்.நேருவிடம், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.எனவே, திருச்சி தொகுதியில், சபரீசன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் தான் போச்சு, திருச்சியாவது கை கொடுக்குமா என நம்பியிருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தற்போது செம கடுப்பில் உள்ளார்.