ஊர் சுற்றும் இளைஞர்களை கொரோனா பாதித்த நோயாளி இருக்கும் ஆம்புலன்ஸில் ஏற்றி தண்டனை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

 தமிழகம் முழுவதும், 2 லட்சத்து 99 ஆயிரத்து 108 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 52 ஆயிரத்து 943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.2,92,38,654 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் ஊர் சுற்றுவது மட்டும் நிற்கவே இல்லை.  இதனால் மாற்று வழியை ஏற்பாடு செய்த திருப்பூர் மாவட்ட காவல்துறைய்யினர் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், வீணாக ஊர் சுற்றும் இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களை ஆம்புலன்ஸில் வலுக்கட்டாயமாக ஏற்றுகின்றனர். ஆம்புலன்ஸிற்குள் நுழைக்கப்படும் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது கொரோனா தாக்கிய நோயாளி ஒருவர் படுத்திருக்கிறார். 

அந்த நோயாளி வீணாக ஊர்சுற்றி ஆம்புலன்ஸுக்குள் இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் அருகில் செல்ல முயல்கிறார். இதனால் அவர்கள் அலறித்துடிக்கின்றனர். உண்மையில் அந்த ஆம்புலன்ஸில் இருந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டவர் அல்ல. ஒப்பனை போடப்பட்ட காவலர். இப்படியாவது மிரட்டி இளைஞர்களை வீட்டை விட்டு வெளியே வராமல் தடுப்பதற்காக திருப்பூர் போலீஸார் விழ்ப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.