Transport Minister M.R. Vijayabaskar pressmeet

தொழிற்சங்கங்கள்தான் கௌரவம் பார்த்துக் கொண்டும் அரசியல் செய்து கொண்டும் தொழிலாளர்களை தவறாக நடத்தி வருகிறார்கள் என்றும், ஊதிய உயர்வு கிடைத்திருக்கும் நிலையில், இதனை ஏற்றுக் கொண்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பணியாளர்கள், முதியவர்கள் என பல
தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பள்ளிக்கு குறித்த நேரம் செல்ல மாணவர்களால் முடியவில்லை. 

வேலை நிறுத்த போராட்டத்தை முடித்து கொண்டு பணிக்கு திரும்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் வாராஹி என்பவர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டுத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மேலும், 5000 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்றும், இது திடீர் போராட்டமோ, தொடர் போராட்டமோ கிடையாது என்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உங்களது போராட்டத்தால் பாதிப்பு யாருக்கு என்பதை உணர்ந்துள்ளீர்களா என்று தொழிற்சங்கத்திடம் கேள்வி எழுப்பினார். மேலும் போக்குவரத்து துறையை நடத்த முடியவில்லை என்றால் தனியார் மயமாக்குங்கள் என்றும் தலைமை நீதிபதி கூறியிருந்தார்.

போக்குவரத்து சங்கங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாளை நடைபெறும் போராட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பணிமனைகள் முன்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டன. சென்னை சேப்பாக்கத்தில் 2000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடும் நிதி நெருக்கடியிலும் 1,250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தத்தை விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கௌரவம் பார்க்காமல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் அழைத்துள்ளன. 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். இதில் என்ன கௌரவம் இருக்கு.

அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஆனால், போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்கள். அதற்கும் அரசு ஒத்துக் கொண்டது. 

தொழிற்சங்கங்கள்தான் கௌரவம் பார்த்துக் கொண்டும் அரசியல் செய்து கொண்டும் தொழிலாளர்களை தவறாக நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்களை திசை திருப்பி வருகிறது.

இன்றைய நிதிநிலையில் ஆயிரம் கோடி என்பது மிகப்பெரிய தொகை. இன்று தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கு நிதி துறை செயலாளரும் ஒப்புக் கொண்டுள்ளார். 

15 ஆண்டுகால பிரச்சனைக்கு தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்துவது என்பது சங்கங்களின் பிடிவாதம்தான். நல்ல ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது. இதனை ஏற்றுக் கொண்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கிறேன். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தவறாக வழி நடத்த வேண்டாம்.

பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே தற்காலிக ஊழியர்களைக் கொண்டு சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தவறான வேலைகளை எதுவும் செய்யவில்லை. வேண்டுமென்றே போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தொழிற்சங்கங்கள்தான் கௌரவம் பார்க்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.