transport employees protest vapaus

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துறை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊதிய உயர்வு . ,ஓய்வூதிய நிலுவை தொடர்பாக கடந்த ஒரு வாரமாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இதனையடுத்து அரசுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையில் பேச்சு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் என்பவரை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

அரசு பஸ் தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுப்பதற்காக, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை ஐகோர்ட் நியமனம் செய்துள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால் நிலைமை வேறு மாதிரியாக திரும்பிவிடும் என எச்சரித்தனர்.

எனவே பொது மக்கள் குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பினரின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பஸ் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஏழை – எளிய மக்கள் மீது அக்கறை கொண்டு இரு தரப்பினரும் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும், மத்தியஸ்தர் நடத்தும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் மத்தியஸ்தரைக் கொண்டு அரசும், தொழிற்சங்கங்களும் 30 நாட்களுக்குள் பேச்சவார்த்தை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே இது தற்காலிக வாபஸ்தான் என்றும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.