T.rajendhar ask question to Anbumani ramadoss

அன்புமணி அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு ஏன் தடைவிதிக்கவில்லை என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகிவரும் "சர்கார்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியானது. அந்தப் படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தினார்.

தொடர்ந்து, பொது சுகாதாரத் துறையும் விஜய் புகைபிடிப்பது போல் உள்ள காட்சிகளை நீக்க அறிவுறுத்தியது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இருந்து "சர்கார்" ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் நீக்கப்பட்டன.

ரஜினிகாந்த் நடித்து வெளியான "பாபா" படம் முதல் "சர்கார்" படம் வரை புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது குறித்து அன்புமணியுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி. ராஜேந்தா், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இருக்கக் கூடாது. அது இளைஞர்கள் மத்தியில் புகைக்கும் பழக்கத்தை உருவாக்கும் என்று கூறும் அன்புமணி, அவர் மத்திய அமைச்சராக இருக்கும்போது புகையிலை விற்பனையை ஏன் தடை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் செயல்படுகிறதா? அல்லது அது தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது என்று குறிப்பிட்டார். இன்று தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சியை தட்டிக் கேட்க முடியாத ஒரு கட்சியாக எதிர்க்கட்சி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை அகற்றாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார் .