இயக்குனர் டி.ஆருக்கு மட்டும் இல்லை பொதுவாக சினிமாக்காரங்களுக்கே அவ்வளவாக புத்தி கிடையாது என்று பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னையில் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதே புகையிலை பொருட்களுக்கு அன்புமணி ஏன் தடை விதிக்கவில்லை என்று டி.ஆர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்றார்.

மேலும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், வர்த்தகத்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. சுகாதாரத்துறை அமைச்சகத்தால் மட்டுமே புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து விட முடியாது. ஆனால் குட்கா பொருட்களுக்கு சுகாதாரத்துறையால் தடை விதிக்க முடியும். அதனால் தான் நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது குட்கா பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் சுகாதாரத்துறை அமைச்சராக சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் அடைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மீது அதன் தீமைகளை தெரிவிக்கும் வகையில் அபாய படங்களை வரைய வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பித்தது நான் தான். தற்போது வரை அந்த உத்தரவு அமலில் உள்ளது. என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால் நிச்சயம் சிகரெட் விற்பனைக்கு நான் அப்போதே தடை விதித்து இருப்பேன்.

இந்த விவரங்களை எல்லாம் நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். ஆனால் டி.ஆர் மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்டுக் கொண்டிருக்கிறார். நானும் அதே பதிலை அளித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு காரணம் டி.ஆருக்கு மட்டும் இல்லை சினிமாக்காரங்களே ஒரு கற்பனை உலகத்தில் இருப்பார்கள். மற்றவர்களை காட்டிலும் அவர்களின் சிந்தனை வேறு மாதிரியாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு புத்தி அவ்வளவு சரியாக இருக்காது. இவ்வாறு அன்புமணி கூறினார்.