மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையே மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றார். காவிரி பிரச்சனையில் பாஜக வந்தாலும் ஒரே ரூட்டுதான், காங்கிரஸ் வந்தாலும் ஒரே ரூட்டுதான், தமிழிநாட்டுக்கு என்னைக்குத்தான் விடிவுகாலம் பிறக்கப்போகுதே தெரியவில்லை என்றார். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பேசும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல; அது தந்திர வாக்குப்பதிவு இயந்திரம் என்றார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதில் வாக்குச்சீட்டு முறையே மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்றார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிப் வைத்து சீப்பான அரசியல் செய்கிறார்கள் என்று கூறினார். 

தமிழ்நாட்டில் நடப்பது நீங்க வேண்டுமானால் தமிழக அரசு என்று சொல்லலாம். ஆனால், இது பாஜகவோட இன்னொரு மாற்று அரசு. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தே இருக்க முடியாது என்று கூறினார்.