traffic Ramasamy removes banners in front of Deepa House
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பேனர்களை, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அகற்றினார். இச்சம்பவம் தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபாவின் வீடு தி.நகர் சிவஞானம் தெருவில் அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தீபா தீவிர அரசியலில் குதித்தார்.
இதையடுத்து அவரது வீட்டின் முன் ஏராளமான ஆதரவாளர்கள், தொண்டர்கள் குவிந்தனர். இதையொட்டி அவரது வீடு அமைந்துள்ள தெருவில் பல்வேறு பேனர்கள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த சாலையில் ஆங்காங்கே கட்அவுட்களும் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தி.நகர் சிவஞானம் தெருவில் தீபா வீட்டின் அருகே சென்றார். அப்போது, அங்குள்ள பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என கூறி, அவற்றை அங்கிருந்து அகற்ற முயற்சித்தார்.
இதை அறிந்ததும், தீபா ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கிருந்த டிராபிக் ராமசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து மாம்பலம் இன்ஸ்பெக்டர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த தீபா ஆதரவாளர்களிடம் சமரசம் பேசினர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், தீபா ஆதரவாளர்கள் வைத்த பேனர்களை அதிரடியாக அகற்றினர். அதன்பின்னர், டிராபிக் ராமசாமி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைதொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
