திமுகவில் யாருக்கு பொருளாளர் பதவி என்கிற எதிர்பார்ப்பிற்கு தற்போது விடைகிடைத்திருக்கிறது.
 
கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதனை தொடர்ந்து பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இரு பதவிகளும் காலியானதால் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும் எனவும் வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

கொரோனா தொற்று ஊரடங்கு மார்ச் 22 ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டதால் பொதுக்குழுவை அப்போது கூட்ட இயலாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “துரைமுருகன் திமுகவின் பொருளாளர் பதவியிலேயே தொடர்வார்” என்று குறிப்பிட்டார். 

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பெரும்பான்மை வன்னியர் சமுதாயத்தை திருப்திப்படுத்தவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது மு.க.ஸ்டாலினின் கணக்கு. 
அடுத்து பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, பொன்முடி, கனிமொழி ஆகியோரது பேர்கள் அடிபட்டன. ஆனால், டி.ஆர்.பாலு மட்டும் விருப்ப மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதனை உறுதி செய்யும் வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராஜா தான், பொருளாளர் பதவிக்கு விண்ணப்பம் வாங்கப்போவதுமில்லை, போட்டியிடப்போவதுமில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும், திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடவில்லை எனக் கூறியிருக்கிறார். ஆக மொத்தத்தில் திமுக பொருளாளர் பதவி டி.ஆர்.பாலுக்கு மட்டுமே என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.