பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முதல் அதற்காக கைமாற இருக்கும் தொகை வரை மிகவும் எளிதாக வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல் திமுக வட்டாரத்தில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்தே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமுடன் திமுக இணைந்து செயல்படும் என்கிற தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. நிதிஷ் குமாரின் பதவி ஏற்புக்கு பாட்னா சென்ற ஸ்டாலின் அங்கு பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசிவிட்டு திரும்பினார். ஆனால் அப்போது சில முக்கிய விஷயங்களில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் பிரசாந்த் கிஷோருடன் – ஸ்டாலின் இணைய முடியவில்லை.

இதனை தொடர்ந்து பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பட்டு வந்த சுனில் என்பவரை திமுக தனது வியூக வகுப்பாளராக பணியில் அமர்த்தியது. ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின் ஆர்க்கிடெக்ட் அவர் தான். ஆனால் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைத்தும் பலன் கிடைக்காதது போன்றவற்றால் மீண்டும் திமுகவின் பார்வை பிரசாந்த் கிஷோர் எனும் பிகேவை நோக்கி திருப்பியது. அதிலும் மிருக பலத்துடன் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருந்தது ஸ்டாலினை இந்த முறை அவர்கள் கேட்கும் அனைத்திற்கும் ஒகே சொல்ல வைத்தது.

இதனை தொடர்ந்து ஐ பேக் டீமுடன் திமுக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் திமுக மற்றும் ஸ்டாலினை புரமோட் செய்யும் வேலைகள் கனக்கச்சிதமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் ஐ பேக் டீம் பணியாளர்கள் மற்றும் திமுக உயர்மட்ட நிர்வாகிகள் இடையிலான உரையாடல் தொடங்கி முக்கிய முடிவுகள் வரை குறிப்பட்ட ஒன்று இரண்டு ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

இதனை சுத்தமாக பிகே ரசிக்கவில்லை என்கிறார்கள். எது லீக் செய்யப்பட வேண்டும், எது லீக் செய்யப்படக்கூடாது என்பதை பிகே டீம் தான் முடிவு செய்ய வேண்டுமாம். ஆனால் ஏற்கனவே சுனில் மூலமாக திமுக தலைமையில் நெருக்கமாக இருக்கும் சிலர் அவ்வப்போது உயர்மட்ட தகவல்களை கசியவிட்டு வருகின்றனர். அதோடு மட்டும் அல்லாமல் பிரசாந்த கிஷோரின் நிறுவனத்திற்கு திமுக 250 கோடி ரூபாய் வரை கொடுக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியதாக சொல்கிறார்கள்.

இப்படி முக்கிய தகவல்கள் வெளியானால் நமது முயற்சிகள் அனைத்தும் வீணாகும் என்று ஸ்டாலினை உஷார் படுத்தியுள்ளாராம் பிரசாந்த் கிஷோர். இந்த முறை என்ன ஆனாலும் சரி பிரசாந்த் கிஷோர் சொல்வதை கேட்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கும் திமுகவின் அதிகார மையம் அடுத்தடுத்து தகவல்களை லீக் செய்பவர்களை கண்டுபிடித்து விரட்டி அடிக்க குறி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.