நிவர் புயல் எதிரொலியாக சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம்  திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. ஆகையால், தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நிவர் புயல் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் போது மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.