நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் 134 எம்எல்ஏக்களும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 5ம் தேதி முதல் அதிமுகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பல நிலைகளை கடந்து வந்துள்ளது. தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பினர், கவர்னருக்கு கடிதம் கொடுத்தனர்.

தங்கள் ஆதரவாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், என்னுடைய ராஜினாமாவை வாபஸ் பெற்று கொள்கிறேன். என்னை ஆட்சி அமைக்க அழையுங்கள் என ஓபிஎஸ் தரப்பினர், கவர்னரிடம் மனு அளித்தனர். இந்த, குழப்பத்துக்கு இடையே எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்க அழைத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைதொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று, அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் நாளை சட்டசபையை கூட்டி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக, எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பரபரப்பு தொற்றி கொண்டது.

எம்எல்ஏக்களை சட்டசபையில் கூட்டி, தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கும் அவசியத்தில் எடப்பாடி இருக்கிறார். அதேநேரம், இன்னமும் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைத்து இருப்பதால், பெரும்பான்மையை எடப்பாடி நிரூபிக்க முடியாது என்று, ஒ.பி.எஸ் தரப்பினர் நம்புகின்றனர்.

இதற்கிடையே நாளை கூடும், சட்டமன்ற கூட்டத்தில் வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்று ஓ.பிஎஸ். தரப்பினர், சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளை நடைபெறும் வாக்கெடுப்பில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கொறடா விஜயதாரணி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, அதிமுகவின் கொறடா ராஜேந்திரன், அக்கட்சி எம்எல்ஏக்கள் 134 பேருக்கும் நாளை நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதை தகுந்த காரணங்கள் இன்றி சபையில் பங்கேற்காமல், எம்எல்ஏக்கள் தவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.