கடந்த ஏப்ரல்  மாதம் 11ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை வேலூரைத் தவிர 542 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  ஒரு சில மாநிலங்களில் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை  22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைம் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் பணி தொடங்க இன்னும் சில மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் நாடு முழுவதும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் டிஜிபிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதில், சட்ட ஒழுங்கு, மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளில் இடையூறு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.