தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதை ஒரு போதும் நிறுத்த முடியாது  என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான டோல் கேட்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த பணத்தைக் கொண்டு நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு  வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டோல் கேட்டுகளில் வரிசையில் நின்று பணம் செலுத்திவிட்டு போவது தாமதமாவதால் பலர் எரிச்சல் அடைகின்றனர். மேலும் சுங்க கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்

இதையடுத்து  சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், டோல் கேட்டுகளை மூட வேண்டும் என்றும்  பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ராஜ் தாக்கரேயின் நவ நிர்மாண் சேனா கட்சி மற்றும் தொண்டு அமைப்புகள் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில்  ஒன்றில் பேசிய   மத்திய சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலை துறை அமைச்சர்  நிதின் கட்காரி, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்வது ஒருபோதும் நிறுத்தப்படாது என்றும். சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டே தீரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நீங்கள் நல்ல சேவைகளை விரும்பினால், அதற்கான தொகையை செலுத்தத்தான் வேண்டும் எனவும் நிதின் கட்கரி  கூறினார்.  

கடந்த 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரம் விபத்துகள் நேரிட்டதாகவும், அவற்றில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியானதாகவும் சுட்டிக்காட்டிய நிதின் கட்காரி, நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய  இது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்தார்.