மகாராஷ்ட்ரா மாநிலத்தில்  கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா, அந்த கூட்டணியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி 23-ந் தேதி அதிகாலையில் ரத்து ஆனது.

இதைத்தொடர்ந்து, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் ‘கெடு‘ விதித்தார்.

ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே நேற்று மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் சிவசேனா கூட்டயைச் சேர்ந்த 162 எம்எல்ஏக்கள் ஆஜராகி தாங்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10. 30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் நிச்சயமாக பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டள்ளது.