இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 2.06 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,409 பேர் உயிரிழந்துள்ளார்கள். 1.51 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில்  தமிழகத்தில் 52 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தொடக்கத்தில் சென்னையில் மட்டுமே எகிறிவந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது பிற மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் கடந்த ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மதுரையில் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 12-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும்  தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அதேவேளையில் ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை 5, 12, 19 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலையில் நான்காவது கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த முழு ஊரடங்கு நீடிக்கும். கோவை, வேலூரில் சில பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதலே முழு ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது.
அத்தியாவசிய தேவைகளான பாலகங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே இன்று செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட பிற அத்தியாவசிய சேவைகளும் இன்று செயல்படாது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று காவல் துறையும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளன. இன்று வெளியே சுற்றினால், போலீஸ் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.