கொரோனா காரணமாக ஒரே ஓர் ஆண்டு மட்டும் தேர்வுகளை நெளிவு சுழிவுகளுடன் நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில் 30 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70% மாணவர்களில் பெரும்பகுதியினர் தோல்வியடைந்து விட்டதாகவும், முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல், தொழில்நுட்பம் பயிலும் மாணவ, மாணவியருக்கான பருவத் தேர்வுகள் கடந்த  பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் பயிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதினார்கள். இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 % மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததாக தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 30% மாணவர்கள் தேர்வு எழுதும் போது 3 வகையான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களின் முடிவுகளை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருக்கிறது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுகள் அதிர்ச்சியை மட்டுமின்றி பல்வேறு வகையான ஐயங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. 30% மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடு செய்ததாகக்கூறி அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. கொரோனா அச்சம் காரணமாக இம்முறை அண்ணா பல்கலை. இணைய வழியில் தேர்வு நடத்தியது. இத்தேர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட மையங்களில் நடத்தப்படாமல், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டனர். அதன்படி மாணவர்கள் எதேச்சையாக திரும்பினால் கூட, அவர்கள் விடைகளைப் பார்க்க திரும்பியதாகக் கருதி அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களை குற்றவாளிகளாக பார்ப்பது பெருந்தவறு ஆகும்.

மாணவர்களின் வீடுகள் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்காது. சிறிய அளவிலான வீடுகளில் ஏதேனும் ஒரு மூலையிலிருந்து ஓசை எழுந்தால் கூட, அந்த இடத்தை நோக்கி மாணவர்களின் பார்வை திரும்புவது இயல்பு ஆகும். அதை குற்றமாகவோ, முறைகேடாகவோ கருதக் கூடாது. இணைய வழியில் தேர்வுகளை நடத்தும் போது மாணவர்கள் மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக்கூடாது. அதேபோல், தேர்வு எழுதியவர்களில் 40%  மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதை நம்ப முடியவில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட பல பாடங்களில் தோல்விடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில்  நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி ஒருவர், 4 பாடங்களில் தோல்வியடைந்ததாக முடிவு வெளியானதால்  மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதேபோல், வேறு சில மாணவர்களும் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை தொடங்கி வைப்பதாக இருக்க வேண்டும்; மாறாக, மாணவர்களின் வாழ்க்கையை முடித்து வைப்பதாக இருக்கக் கூடாது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் கூட, அவை மாணவர்களுக்கு புரியும்படியாக இல்லை; பொருளாதாரம் & தொழில்நுட்பம் இல்லாததால் பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலவில்லை. இவை தவிர கொரோனா காரணமாக ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களில் பலர் தேர்வில் பங்கேற்றதே பெரும்  வியப்பளிக்கும் விஷயம் ஆகும். களச்சூழலையும், மாணவர்களின் மன அழுத்தத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைந்ததாக அறிவிப்பது தான் உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும். 

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மிகக்கடுமையான முறையில் தேர்வுகளை நடத்தி, மிகக்கொடிய முறையில் மாணவர்களை தண்டித்து, மனசாட்சி இல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையை சூனியமாக்கி உள்ளது. இவை சுரப்பா போன்றவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வேண்டுமானால்  உதவுமே தவிர, மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.

2020-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இப்போது வரை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தான் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் கையாண்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக ஒரே ஓர் ஆண்டு மட்டும் தேர்வுகளை நெளிவு சுழிவுகளுடன் நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. எனவே, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்; அதன்மூலம் மாணவர்கள் வாழ்வில் அரசு ஒளியேற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.