*  தமிழினத்தின் எதிரியான கோத்தபயா ராஜபக்சே அமோக வெற்றி பெற்று, இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அதிபரானது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது. அதிபர் தேர்தல் முடிவுகளை பொது வாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும், தேவைப்பட்டால் இன்னொரு வாக்கெடுப்பு நடத்தி, தனித் தமிழ் ஈழம் அமைத்துக் கொடுக்க, ஐ.நா. அமைப்பு முன் வர வேண்டும் -   டாக்டர் ராமதாஸ்

*    கோவையில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் இளம்பெண் படுகாயமுற்று, அவரது காலை இழக்க வேண்டிய துர் நிலை வந்துள்ளது. இது பற்றி முதல்வரிடம் கேட்டால், தூத்துக்குடி சம்பவத்தை எப்படி தெரியாது! என்று கூறினாரோ, அதேபோல் இச்சம்பவம் குறித்தும் தெரியாது! என்று அலட்சியமாக கூறியிருப்பது வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, செயற்கை கால் பொருத்த ஆகும் செலவை தி.மு.க. ஏற்கும் -   மு.க.ஸ்டாலின்

 

*    உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடக்கும் பட்சத்தில், அதை சந்திக்க காங்கிரஸ் தயாராகவே உள்ளது. தமிழக உரிமைகளுக்காக போராடினார் ஜெயலலிதா. ஆனால் இ.பி.எஸ். அரசோ மாநில உரிமைகளுக்காக போராடுவதற்கு மறந்துவிட்டது  -    கே.எஸ்.அழகிரி

*    உள்ளாட்சி தேர்தலில் தமிழக பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் வாங்கும் பணி, அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியது. சென்னையில் நடிகை கவுதமி, விருப்ப மனுக்களை வாங்கி துவக்கிவைத்தார்-  பத்திரிக்கை செய்தி

*    தியேட்டர்களில் முன்னர் படம் திரையிடுவதற்கு முன்னர், திருவள்ளுவர் படத்தை காண்பிப்பர். அதன் பிறகு தான் சினிமா படம் காண்பிக்கப்படும். அது போல இனிமேல் திரைப்படங்களுக்கு முன் திருவள்ளுவர் படத்தை காண்பிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களை வலியுறுத்துவோம் -    செல்லூர் ராஜூ

*    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் போட்டியிட தயார். கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட தயாராக உள்ளேன் -    உதயநிதி ஸ்டாலின்

*    திருச்சி மத்திய சிறை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் பலருக்கு ஜாமின் கிடைத்தும், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.  இதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் -    சீமான்

*    தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடகாவில், அந்த மாநில அரசு தடுப்பணை கட்டும் பணியை 70 சதவீதம் முடித்துவிட்டது. இதை துவக்கத்திலேயே கண்டிக்காதது ஏன்? என நீதிமன்றமே தமிழக அரசை கேட்டுள்ளது. இப்போது குற்றவாளி கூண்டில்  தமிழக அரசு -    வைகோ

*    சேலத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஆறு வயது சிறுமியிடம், சீருடையில் வந்த ஆண் காவலர்கள் விசாரித்துள்ளனர். இது சட்டத்திற்கு முரணானது. பெண் போலீசார் கூட, சீருடையில் வரக்கூடாது. இதை செய்ய தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -உ.வாசுகி 

*    சபரிமலைக்கு கடந்த ஆண்டு சென்ற பெண்களுக்கு அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு பாதுகாப்பு அளித்தது. இந்த ஆண்டு, பாதுகாப்பு அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்து, சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்த மாநில அரசின் பொறுப்பு -     திருமாவளவன்.