TN Minister Jayakumar Pressmeet
அதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது கட்டுரைதான் என்றும், நாளிதழில் கட்டுரை எழுதியவர் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாது என்றும் கட்டுரை எழுதப்பட்டதாலே கட்டுப்பாடு இல்லை என்பதை ஏற்க முடியாது என்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நமது புரட்சி தலைவி அம்மா நாளிதழில், அதிமுக - பாஜக இடையிலான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதிமுகவும் பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோன்று செயல்படுவதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என்றும், இந்த உறவை கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது
நமது புரட்சி தலைவி அம்மா நாளிதழில் வெளியான கட்டுரை குறித்து, மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை, தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து இப்போது கூற முடியாது என்றும், தேர்தல் நேரத்தல் தலைமைக் கழகம்தான் முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, கட்டுரை என்பது யார் வேண்டுமானாலும் எழுதலாம். அது கட்டுரை தானே தவிர செய்தி அல்ல என்றார். மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றும் நிலை உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு, தமிழக அரசின் திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம்.
தமிழகத்தின் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே மத்திய அரசுடன் இணக்கமான நிலை வேண்டும். ஆனால், அரசியல் ரீதியான நிலை என்பது கட்சிதான் முடிவு செய்யும். கட்சி உரிய நேரத்தில் கூட்டணி குறித்து வெளியிடும். நாளிதழில் கட்டுரை எழுதியவர், கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாது. அதிமுகவைப் பொறுத்தவரை கட்டுக்கோப்பாக உள்ளது. அதில் எந்த ஐயமும் தேவையில்லை.
கட்டுரை எழுதப்பட்டதாலேயே கட்டுப்பாடு இல்லை என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டுக்கு உற்ற நண்பர்களாகவும், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் கூட்டணி இருக்கும் என்றார். கூட்டணி குறித்து, தேர்தல் காலத்தில் தலைமை முடிவு செய்யும். ஊழலின் மொத்த உருவம் திமுக. அவர்கள் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல்தான் உள்ளது என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
