இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டு விட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் வாக்கை யாரோ ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் இரண்டரை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,800 இடங்கள் பதட்டமானவை என போலீசார் கண்டறிந்துள்ளனர். இன்று காலை முதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் போன்ற சச்சரவுகள் எழுந்தாலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் 3 மணி நிலவரப்படி 31.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தலில் பன்முறை போட்டி நிலவுவதால் அந்தந்த கட்சிகள் தங்களுக்கான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவை பொருத்தவரையில் இன்று காலை முதலே அக்கட்சித் தொண்டர்கள் தங்களுக்கான வாக்குகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் அத்துமீறல்களையும், வீடியோக்களாகவும், செய்திகளாகவும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா நகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர்கள் முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டு விட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என பலரும் அண்ணாமலையை டேக் செய்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். எழுத்துப் பிழையால் தவறு நிகழ்ந்து விட்டது, கள்ள வாக்காக செலுத்தப்படவில்லை, என்று தேர்தல் அலுவலர் எல்.முருகனிடம் விளக்கம் அளித்ததாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவர் தனது வாக்கை செலுத்துவார் என்றும் சில ஊடகங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னும் பலர் அண்ணாமலையை டேக் செய்து ஒன்றிய அமைச்சர் ஓட்டை யாரோ ஒருத்தர் போட்டது கூடவா உங்க பூத் ஏஜென்ட் கவனிக்கல என்று கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.
