ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்... சிலிண்டர் விலை உயர்வுக்கு வேல்முருகன் கண்டனம்!!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

tn govt should put pressure on the central govt in cylinder price hike issue says velmurugan

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் கஷ்டப் படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத பிரதமர் மோடியும், அவரது அரசும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல்,  வீட்டு உபயோக எரிவாயு 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்பட்ட இந்த தொடர் உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது. கடந்த ஆண்டுகளில் அடிக்கடி உயர்ந்து கொண்டே இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை மேகாலயா, திரிபுரா மற்றும் நகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பையொட்டி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது தேர்தல் முடிந்ததையடுத்து தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்... பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்!!

அதன்படி, 2023 மார்ச் 1 அன்று, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.1118.50 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.351 உயர்த்தப்பட்டு ரூ.2,268 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பட்ஜெட்டில் பெரும் பற்றாக்குறையை உருவாக்கியுள்ள ஒன்றிய பாஜக அரசு, சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்துவதன் மூலம் ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டிலும் பெரும் ஓட்டையை போட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற பெயரில் மானியத்தை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப் போவதாக ஒன்றிய அரசு கூறியது. அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 2020 ஜூன் மாதத்திலிருந்து மானியம் முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது.

இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்... மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!!

இதைக்கூட நேரடியாக அறிவிக்காமல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றவர்களுக்கு மட்டுமே மானியம் என்று மாற்றி அதையும் கூட மாதத்திற்கு 200  ரூபாயாக குறைத்து நாடகமாடியது மோடி அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை இப்படியே மாதந்தோறும் ஏற்றிக்கொண்டே போனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவன முகவர்களிடம் திரும்ப ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே, சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிடக்கோரி, இந்திய முழுவதும் ஒருமித்த கருத்துள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.   

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios