ஆளுனர் சொல்வதே கேட்கும் நிலைமைக்கு திமுக இல்லை, திமுக சொல்வதைதான்  ஆளுனர் கேட்கிறார் என  அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும்,  தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அ.ராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆளுநர் மிரட்டியதால் தான் திமுக போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டது என சிலர் விமர்சிக்கின்றனர்,  ஆளுநர் சொல்வதை கேட்டு நடந்துகொள்ளும் அளவிற்கு திமுகவின் நிலைமை இல்லை,  நாங்கள் சொன்னதைத்தான் ஆளுநர் கேட்டிருக்கிறார் என ஆ. ராசா அதிரடியாக கூறியுள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர் எல்லா மாநிலங்களிலும் நுழைய முடிந்த பாஜகவால் தமிழகத்தில் கால்வைக்கவே  முடியவில்லை அதற்குக் காரணம் பெரியார்,பேரறிஞர் அண்ணா, கலைஞர் என்ற மாபெரும் தலைவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதால் தான் என்றார். தமிழகத்தில் பாஜகவின்   ஜம்பம் பலிக்காது என்றார்.

திமுக சந்தித்த பல போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டம் என்றால், அது இந்தி எதிர்ப்பு போராட்டம்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திதிணிப்பை திமுக முறியடித்த நிலையில் ,  மீண்டும் இந்தி மொழி திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.   திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதே பாணியில் அதிரடியாக போராட்டத்தை அறிவித்து ஹிந்தி மொழி அறிவிப்பை பின்வாங்க செய்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என அவர் பாராட்டினார்.

சந்திக்க வேண்டும் என ஆளுனர் அழைத்தால் தவறாமல் போய் சந்திக்க வேண்டும் என்பது அரசியில் நடைமுறை, நாகரீகம், அனால் சில அதிமுகவினரோ, ஆளுனருக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு இப்போது அவரையே போய் சந்திக்கலாம என்று திமுகவை கேள்வி கேட்கின்றனர். அரசியல் நடைமுறை தெரியாதவர்கள் தான் இப்படியெல்லாம் கேட்க முடியும் என்று அவர்களுக்கு நான் கூறிக்கோள்கிறேன் என்றார். ஆளுநரின் சந்திப்புக்கு பிறகு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததை,  ஏதோ ஆளுநர் திமுகவை  மிரட்டியதாகவும், அதனால்தான் திமுக போராட்டத்தை  வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் திமுகவை விமர்சித்து சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், ஆளுனர் மிரட்டி பணியவைக்கும்  அளவிற்கு திமுகவின் நிலைமை இல்லை என்றார்.

 

தமிழகத்தில் இந்தி திணிப்பு போன்ற திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று அவர் நேரில் விளக்கியதால் திமுக தலைவர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். அதுவும் தற்காலிகமான வாபஸ்தான், மீண்டும் இந்தி திணிப்பு என்று ஆரம்பித்தால் மீண்டும்  திமுக போராட்டத்தில் குதிக்கும் என்பது தான் அதன் அர்த்தம் என்றார். ஆளுனரின் சொல்படி திமுக கேட்கவில்லலை, திமுக  சொல்படிதான் ஆளுனர் நடந்துகொண்டிருக்கிறார், தமிழகத்தில் அரசியல் மரபுகளை  மீறி ஆய்வு நடத்தக்கூடாது என திமுக  ஆளுனருக்கு எதிராக போராடியது, அதனால் தான் ஆளுனர் இப்போதெல்லாம் எங்கும் ஆய்வுக்கு செல்வதில்லை. என்று அதிரடியாக கூறினார்.