விவசாயிகளின் பிரச்சனைக்காக 25 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிளுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், உள்ளிட்ட கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இதற்கு வணிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் நேற்று முழு அடைப்பு போராட்டம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. 

இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக இயக்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர். 

விவசாயிகளின் நலனுக்காகவே முழு அடைப்பு போராட்டம் நடைபெறுதவாகவும், இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசினார். 

முன்னதாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், 25 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு அளித்தால், தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். 

இந்தச் சூழலில் எதிர்க்கட்சிகள் அழைப்புவிடுத்துள்ள முழு அடைப்பில் தமிழக அரசு பங்கேற்காது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.