திமுக வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளார்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் பங்கேற்று பேசினார். அண்மையில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது. அதை மனதில் கொண்டு கருப்பணன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.


“ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஓட்டை மாற்றி போட்டுவிட்டார்கள். இதனால் சில இடங்களில் திமுக வெற்றி பெற்றுவிட்டது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியையும் திமுக பிடித்துள்ளது. தலைவர் பதவியை அவர்கள் பிடித்தாலும் அவர்களால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. திமுக வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும். தற்போது அதிமுக ஆளுங்கட்சியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக வெற்றி பெற்றாலும், அவர்களால் திட்டப்பணியை முழுமையாக செய்ய முடியாது’’ என்று பேசினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் கருப்பணன் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் அதிமுக தோல்வியடைந்தது பற்றி வருத்தப்படவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை அதிமுக பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.