உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட  தமிழக மாணவரின் கடைசி குழுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே ஏற்பட்ட போரின் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்காக சென்ற மாணவர்களை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் மீட்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், வட மாநில மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக எம்பிக்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு மூலமாக மாணவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 இதற்காக 3.5 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து 1524 மாணவர்கள் அரசு செலவிலும், 366 மாணவர்கள் சொந்த செலவிலும் தமிழகம் திரும்பியுள்ளனர். இதனையடுத்து உக்ரைனில் சிக்கியிருந்த மூன்று மாணவிகள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கடைசி குழு நேற்று டெல்லி வந்தடைந்தது. இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


இதனை தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் உக்ரைனில் எற்பட்டுள்ள போர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். உக்ரைனில் சிக்கியிருந்த தமிழக மாணவர்களை விரைவாக மீட்க உதவிய தமிழக எம்.பி குழுவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்கள் மீட்கும் விவகாரத்தில் தமிழக அரசு தங்களது எல்லையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என பாஜக ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த திமுக மாநிலங்களைவை உறுப்பினர் திருச்சி சிவா, உக்ரைனில் மாணவர்கள் மீட்கப்படுவதில் பாகுபாடு காட்டப்பட்டதாகவும், தென் மாநில மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து தான் தமிழக அரசு அமைத்த குழு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்திய பின்பு தான் தமிழக மாணவர்கள் அதிகளவு நாடு திரும்பியதாக கூறினார். வேறு எந்த மாநிலமும் செய்யாத நிலையில் தமிழக மாணவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் திருச்சி சிவா கூறினார்.