Asianet News TamilAsianet News Tamil

தம்பியை கட்சியை விட்டு நீக்கிய அன்பு அண்ணன்... ஓ.ராஜா நீக்க அதிர்ச்சி பின்னணி..!

ஓ.பன்னீர்செல்வமும் தனது அன்புத் தம்பியிடம் வலிக்காமல் எடுத்துக் கூறி வந்தார். ஆனால், 'நீ மட்டும் சம்பாதிக்கணும்... நான் சும்மா இருக்கணுமா?' என ஓ.ராஜா எகிறியடித்திருக்கிறார். 
 

TN Deputy CM's Brother Expelled From AIADMK background
Author
Tamil Nadu, First Published Dec 19, 2018, 6:00 PM IST

சமீபகாலமாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தெறிக்க விடும் பகையாளியாக இருந்து வந்தவர் யார்? டி.டி.வி.தினகரனா? வெற்றிவேலா? ஸ்டாலினா? அவரது கூட்டாளி எடப்பாடியாரா? என்று கேட்டால் இல்லவே இல்லை எனக் கூறி அடித்துக் கூறினர்  பன்னீர் ஆதரவாளர்கள். அப்படியானால் யார்தான் அவருக்கான பிரச்னை? என்று கேட்டால் ஒட்டுமொத்த கரங்களும் சுட்டிக் காட்டியது ஓ.பன்னீரின் தம்பியான ஓ.ராஜாவை தான். அவரது செயல்பாடுகள் பன்னீர்செல்வத்துக்கு மிக பெரிய இடைஞ்சலை கொண்டு வந்தன.  

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பூசாரி நாகமுத்து என்பவரின் தற்கொலை விவாகரத்தில் ஓ.ராஜாவின் பெயரும் அடிபட்டு பன்னீரின் தலையும் உருட்டப்பட்டது. அந்த விவகாரத்தில் ஜெயலலிதா வைத்த விசாரணையில் அப்போது விளக்கம் கொடுத்து மீள்வதற்குள் படாதபாடு பட்டார் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் எத்தனையோ சிக்கலை சந்தித்து, பெரும் சர்ச்சை மற்றும் தூற்றுதலை வாங்கிக் கட்டிக் கொண்டு அவர் ஆட்சி மற்றும் கட்சியில் பெரிய பதவியில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. TN Deputy CM's Brother Expelled From AIADMK background

ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்கவும், அவரை மனரீதியாக காயப்படுத்தவும் எதிர் கட்சிகள் மட்டுமில்லை அவரது சொந்த கட்சியான அ.தி.மு.க.விலேயே பெரும் கோஷ்டிகள் முஸ்டி முறுக்கி செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தன் தம்பி ராஜா மீண்டும் மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கி, பிரச்னைகளை இழுத்து வந்ததால் பெரும் தவிப்புக்கு ஆளாகி வந்தார் பன்னீர்செல்வம். சில நாட்களாக ராஜா மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகத்தான் தேனி முழுக்க பெரும் புகார் மழை கொட்டிக் கொண்டிருந்தது. 

அதாவது... தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடி பகுதிகளில் மணல், கரம்பை மண் உள்ளிட்ட கனிம வளங்களை ராஜாவின் தரப்பு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அந்த புகார். இந்த பிரச்னையை எடுத்து வைத்து போராட்டங்கள் நடத்தியதோடு, கலெக்டரிடம் புகார், பத்திரிக்கைகளுக்கு பேட்டி என்று கொடுத்துக் கொண்டிருந்த தென்னிந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியின் துரை என்பவர் சமீபத்தில் மிக கடுமையாக ஒரு கூலிப்படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடி “என்னை தாக்கியது ஓ.ராஜாவின் ஆட்கள்தான். அவர் உத்தரவிட்டுதான் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.

 TN Deputy CM's Brother Expelled From AIADMK background

ஆனால், துணை முதல்வரின் தம்பி என்பதால் போலீஸ் புகாரை ஏற்க மறுத்தது. எனவே காவல்துறையின் தலைமையிடம் இதில் தலையிட்டு எனக்கான புகாரை ஏற்க செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டுக்கு சென்று வழக்கு பதிய வைத்து, ராஜாவை கைது செய்யும் வரை அடங்கமாட்டேன்.” என்று கர்ஜித்தார். ஆனால், ஓ.ராஜாவின் தரப்போ கனிமவள கொள்ளை புகாரையும், துரையை தாக்கிட ஆள் அனுப்பினார் எனும் புகாரையும் அடியோடு மறுத்தனர்.  

இருந்தாலும் கூட ‘தன் அண்ணன் துணை முதல்வராக இருக்கும் தைரியத்தில்தான் ஓ.ராஜா இப்படி கனிமங்களைக் கொள்ளையடிப்பது,  தட்டிக் கேட்பவர்களை கூலிப்படையை வைத்து தாக்குவது என்று அத்துமீறிக் கொண்டிருக்கிறார். எனவே ஓ.பி.எஸ். பதவி விலக வேண்டும்.’ என்று போர்க்கொடி தூக்குகி வந்தனர். ஓ.பன்னீர்செல்வமும் தனது அன்புத் தம்பியிடம் வலிக்காமல் எடுத்துக் கூறி வந்தார். ஆனால், 'நீ மட்டும் சம்பாதிக்கணும்... நான் சும்மா இருக்கணுமா?' என ஓ.ராஜா எகிறியடித்திருக்கிறார்.

TN Deputy CM's Brother Expelled From AIADMK background

ஓ.ராஜாவின் செயல்களை நோட்டம் விட்டு வந்த எடப்பாடி ஓ.பி.எஸை அழைத்து, உங்கள் அன்புத்தம்பியின் செயல்பாடுகளை இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமான அவப்பெயரல்ல ஆட்சிக்கும் கட்சிக்குமான களங்கம். இதில் ஒரு முடிவுக்கு வந்தாக கட்ட்டாயம் ஏற்பட்டுள்ளது என காதில் ஓதிய பிறகே ஓ.ராஜாவை கட்சியில் இருந்து வெளியேற்ற முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன் பிறகே, ’’அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தேனி மாவட்டத்தை சேர்ந்த பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக்கேட்டுகொள்கிறோம்’’ என ஓ.பி.எஸ்- ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios