காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பெங்களூருவுக்கு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், மீண்டும் நீதிமன்றத்தை நாடபோவதாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் உட்பட எந்தக் கட்சியும் குமாரசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஸ்டாலின் எதிராக இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டதால் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களை திரும்பப் பெற வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பெங்களூருவுக்கு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.

குட்கா விவகாரத்தில் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளது. எனவே இதில் திமுக, அதிமுக இரு கட்சிகளுமே விசாரிக்கப்பட வேண்டியவர்கள். குட்கா வழக்கில் சிபிஐ தனது விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும். குட்கா விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைக்கிறது. பாஜக மீது எந்தப் புகாரும் இல்லாததால் அமித்ஷா மீது தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்புகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.