நாளை தமிழகம் வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும் என்று வைகோ சவால் விடுத்துள்ளார். வைகோவின் இந்த கருத்துக்கு, தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும் என்று பிரதமர் மோடிக்கு சவால்விட்ட மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறியுள்ளன. தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மகாபலிபுரம் செல்கிறார். அங்கிருந்து திருவிடந்தைக்கு காரில் இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ, உங்களுக்கு தைரியம் இருந்தால், சாலை வழியாக வாருங்கள் என்று கூறியுள்ளார். 

சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், நாளை சென்னை
வரவிருக்கும் மோடி துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும் என்றார். கருப்புக் கொடிகளைப் பார்த்து பிரதமர் ஏன் பயப்பட வேண்டும். கொடிகளில் குண்டு வைத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரா...? இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியான பிரதமரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால், நீங்கள் சாலை வழியாக வாருங்கள் என்று வைகோ ஆவேசமாக கூறினார்.

வைகோவின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே. அதைக் கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோவை வன்மையாக கண்டிக்கிறோம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைச் சொல்லும் வைகோ, யாருக்கு பயந்து கள்ளத் தோணியில் இலங்கை சென்றார் என்றும், பிரதமர் முன்னறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாகிஸ்தானுக்கே தைரியமாக சென்றவர் என்றும் தமிழிசை பதிவிட்டுள்ளார்.