TN assembly organises on june 14

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வை மையப்படுத்தி ஆயிரம் பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட எல்லா கட்சிகளும் விழி விரிய எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஜூன் 14ஐ. காரணம் அன்றுதான் சட்டமன்றம் கூடுகிறது. 

அரசு நிலைக்குமா, நிலை குழையுமா என்று சந்தேகம் கிளம்புமளவுக்கு ஆளும் கட்சியில் உட்கட்சி பிரச்னைகள் வெடித்திருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடர் மிக மிக முக்கியமான ஒன்றாகிறது. ஆட்சி கவிழும் நிலை வராது என்பது போல்தான் கடந்த இரண்டு நாட்களாக நிலவரங்கள் இருக்கின்றன.

கவிழ்ந்தால் மீண்டும் எம்.எல்.ஏ.வாவதே சிரமம்தான் என்பது பல அமைச்சர்களுக்கு புரிந்திருக்கிறது. அதனால் பகீரதபிரயத்னம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்கும் பணியில் பள்ளம் தோண்டி வேலை பார்க்கிறார்கள்.

ஆட்சியை கவிழ்க்கும் பணிகளில் எதிர்கட்சியான தி.மு.க.வும் ஈடுபட்டதாக தெரியவேயில்லை. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி ஒருவேளை ஆட்சி கலைந்தால் தமிழக அரசியல் சூழல் புயல் வேகத்தில் மாற்றங்களை சந்திக்கும். 

ஆக இவ்வளவு சூட்சமங்களை உள்ளடக்கியிருக்கிறது ஜூன் 14 கூட்டத்தொடர். பெரும்பான்மை விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும். பொதுவான சட்டமன்ற அலுவல்கள் விஷயத்திலும் எப்படி நாம் நடக்க வேண்டும்? என்பதை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் எல்லா கட்சிகளுமே யோசிக்க துவங்கிவிட்டன. 

தி.மு.க.வுக்கு ஆதரவாக ஒரு காலும், ஈ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக மறுகாலும் வைக்கலாமா என்கிற குழப்பத்தில் தலைசொறிந்து உட்கார்ந்திருக்கிறது பன்னீரின் அணி. தினகரன் அணிக்கான அஸைன்மெண்ட் ஜூன் 4 அன்று காலையில்தான் துல்லியமாக வந்து விழும் என்கிற நிலை.

ஆட்சி கலைப்பு சூழலை உருவாக்கும் ‘வெட்டு தீர்மானத்தை கொண்டு வரலாமா? எப்படி அந்த சூழலை உருவாக்குவது என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் இப்போதைக்கு எதிர்கட்சி பன்னீர், பழனிசாமி டீம்தான். இவர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவதே குறி என்று இருக்கிறார்கள். குறிப்பாக வெற்றிவேல், தங்கதமிழ், இன்பதுரை போன்றவர்கள் எக்ஸ்ட்ரா டைம் போட்டு இதற்காக ஒர்க் அவுட் செய்கிறார்கள். 

ஸ்டாலினை பொறுத்தவரையில் ஆட்சி கலைப்பு விவகாரம் எழுந்தால் அந்த சூழலை பொறுத்து நடவடிக்கையை முடிவு செய்யலாம் ஆனால் இயல்பான அலுவலில் எப்படி ரியாக்ட் செய்யலாம் என்பது பற்றித்தான் வெகுவாக யோசிக்கிறார்.

இந்த கூட்டத்தொடரிலும் கிரவுண்டுக்கு போன கங்குலி டக் அவுட் ஆகி சட்டென திரும்புவது போல் வெளிநடப்பு, வெளிநடப்பு என்று வந்தால் மக்கள் நிச்சயம் வெறுத்துவிடுவார்கள் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்.

அதனால் முடிந்த வரை உள்ளேயிருந்து பிரச்னை செய்வதே குறி என்று வைத்திருக்கிறார். அதிலும் சட்டசபை வைரவிழா கொண்டாடும் கருணாநிதிக்கு உரிய மரியாதையும், வாழ்த்துப்பாவும் சட்டசபையில் பாடாவிட்டால் தி.மு.க.வின் உள்ளிருப்பு போராட்டம் உச்சத்துக்கு போகும் என்கிறார்கள். 

எடப்பாடி நிலைதான் பரிதாபம். எதிர்கட்சி என்று ஒன்று இருந்தால் பரவாயில்லை, ஆனால் சுத்தி சுத்தி எதிர்கட்சிகளாகவே இருந்தால் என்னதான் செய்வார் பாவம்? நிச்சயம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் எந்த திட்டத்தையும் நிறைவேற்றும் வாய்ப்பு இருப்பதாக அவருக்கு தெரியவில்லை.

எனவே ஜெயலலிதா போல் விதி எண் 110ஐ கையிலெடுக்கலாமா என்று தீவிரமாக யோசிக்கிறார். அமைச்சர்களும் இதையேத்தான் வலியுறுத்துகிறார்களாம். 

காங்கிரஸ் என்னவோ தி.மு.க.வின் ஜெராக்ஸாகதான் செயல்படப்போகிறது. இல்லையென்றால் சிவனேயென்று உள்ளே தங்கள் இருக்கையில் அமைதியாக உட்கார்ந்திருக்க போகிறது அவ்வளவுதான். 

கருணாஸ், உ.தனியரசு ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களும் தினகரன் ஆதரவு நிலையை எடுப்பார்கள் என்று தெரிகிறது. தமீமுன் அன்சாரியை பொறுத்தவரையில் சூழலுக்கு ஏற்ப செயல்படலாம்.

அதேவேளையில் தி.மு.க.வை சேந்த இஸ்லாமிய வி.வி.ஐ.பி.க்கள் இருவர் தமீமிடம் தொடர்ந்து பேசி வருகிறார்களாம். அது எதற்காக என்பது இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கியதும் புரியலாம்.
ஆக மொத்தத்தில் தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போவே ச்ச்ச்ச்சும்மா சூடேற துவங்கிவிட்டது ஜூன் 14 ஜூரம்!